History of Vithunni Devasthanam
பதினெட்டாம் நூற்றாண்டில், எம்மாம்பூண்டி-யில், திரு சின்னாஞ்செட்டியார் மகன் திரு குழந்தைவேல் செட்டியார், புகையிலை வியாபாரத்தில் சிறப்புற்று முன்னேறினார் பொதி மாடுகள் புகையிலையை பாலக்காட்டிற்கு கொண்டுசென்று விற்பனை செய்து பெரும் பொருள் ஈட்டிவந்தார். அறப்பணிகளையும் நாட்டமுடன் செய்து வந்தார் ஒரு நாள், பகல் உணவிற்குப்பின் கண்ணயர்ந்தவர் கனவில் தோன்றிய சிறுவன், தான் அருகிலேயே உள்ளதை உணரவில்லையா? என்று வினவியுள்ளான். திடுக்குற்று எழுந்த குழந்தைவேல் செட்டியார், வியப்பிலாழ்ந்தார்.
இரவு உறக்கத்தின்போதும், மீண்டும் அதே சிறுவன் கனவில் தோன்றி, அவரை ஓலை வேய்ந்த இடத்திற்கு அழைத்துச்சென்று, அங்கு எழுந்தருளியிருந்த விநாயகப் பெருமானை காட்டியுள்ளான். உறக்கம் கலைந்த அவர், அதைக் கனவு என்றறிந்தார். இருப்பினும், அதிகாலை நீராடி, கனவில் கண்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள விநாயகரைப் பார்த்து வியந்தார். தனது கனவில், சிறுவன் வடிவில் விநாயகரே வந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்வுற்று, அவ்விடத்தில் கோயில் கட்ட முடிவெடுத்தார்.வராகனுக்கு அவ்விடத்தை வாங்கி, ஆலயம் எழுப்பி, விநாயகர் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் சிறப்பாக செய்து, வழிபடத் துவங்கினார் அதுமுதல் அவரது தொழிலில் மேலும் மேலும் முன்னேறினார்.
தினசரி வழிபாட்டிற்கு நிரந்தர வழி ஏற்படுத்திட எண்ணியிருந்தபோது, மைசூரை ஆண்டுவந்த ஹைதர் அலியும், அவரது மகன் திப்புசுல்தான், வெள்ளையருடன் போரிட்ட நிதிப்பற்றாக் குறையில் இருந்துள்ளனர். எம்மாம்பூண்டியில் வசிக்கும் திரு குழந்தைவேல் செட்டியார் பெரும் வணிகர் என்றும், ராணுவச் செலவில் பொருள் தருமளவிற்கு அவர் பெரும் பொருளுள்ளவர் என்று மறைந்த திப்பு சுல்தான், சேவூர் அருகிலுள்ள தண்டுக்காரன் பாளையத்தில் குழந்தைவேல் செட்டியாரை சந்தித்து, ராணுவச் செலவுகள் கொடுக்குமளவிற்கு அவரிடத்தில் பொருள் உள்ளதா என்று கேட்டுள்ளார். இதற்கு நம்மவர் அவரது வீட்டிலிருந்து அரண்மனைவரை சால்விட்டு செல்லுமளவிற்கு தம்மிடம் பொருளுள்ளதாகக் கூறியதைக் கேட்டு வியந்த திப்பு சுல்தான்,தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று சென்று, வெள்ளையருடன் போரிட்டு சென்றுள்ளார் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட குழந்தைவேல் செட்டியார், சிறப்பு விருந்தினராக கவனிக்கப்பட்டு, அவர் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக என்ன வேண்டுமென்று மன்னர் கேட்க, பாலக்காட்டிலுள்ள விற்றூணியாருக்கு நித்திய பூஜைகள் நிரந்தரமாக செய்ய நிலங்கள் வேண்டுமென்று குழந்தைவேல் செட்டியார் சொல்ல, மன்னரும் மகிழ்வுடன் விற்றூணிக்கு வருகைபுரிந்து, நம்மவர் கேட்ட எல்லைவரை நிலங்களை விற்றூணியார் பெயரில் பட்டயம் செய்து, ஸ்ரீவிற்றூணியார் தேவஸ்தம் (தேவசம்) ஜம்மி என பெயரிட்டு விடைபெற்றார்.
அதன்பின்னர், காசி சென்ற நம்மவர்கள் கொண்டுவந்த சிவலிங்கம், ஸ்ரீவிசாலாட்சி,சமேத காசி விஸ்வநாதர் ஆக பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருணைபாளையம் திரு சுப்பராய செட்டியார், 175 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீசுப்பிரமணிய பெருமான் கோயிலை ஸ்தாபித்தார். வேலம்பாளையம் திரு ஏ.கே. பொான்சிவளை செட்டியார், ஆண்டுகளுக்கு முன், நவகிரஹ பிரதிஷ்டை செய்வித்தார். 1968-ல் நடைபெற்ற குப்பாபிஷேகத்தின்போது, ஸ்ரீசனீஸ்வர பகவான் சந்நிதி ஸ்தாபிக்கப்பட்டது
இந்த ஆலயம், நம்மவர்களின் பெரும் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு, 1-11-2009 அன்று, மிகச் சிறப்பான முறையில், சொர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஸ்ரீவிற்றூணியார் தேவஸ்தானம், எம்மாம்பூண்டி ஐந்நூற்றுச் செட்டிமார்கள் சேர்ந்து அமைத்த நிர்வாகக்குழுவால், பாரம்பரியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விற்றூணியார், நம்மவரின் அனைத்து குலதெய்வம் என்றால், அது மிகையாகாது.
